அரசாங்கத்தின் நிவாரண கொடுப்பனவான 5000 ரூபாய் சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

0
144

ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான
சோ. ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் வழங்க படவேண்டும் என்று அரசாங்கம் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவித்தது.
இந்த அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டுமானால் தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்று நிர்பந்தித்து வருகின்றன.

இந்த நிபந்தனைக்கு உட்படாத தொழிலாளர்களுக்கு அவர்கள் பறிக்கின்ற தேயிலை கிலோ அளவில் ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் முதல் 50 ரூபாய் என்ற வகையிலேயே நாளாந்த சம்பளத்தைப் பெரும்பாலான தோட்டங்களில் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அத்துடன் பெரும்பாலான தோட்ட நிர்வாகங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரமே வேலை வழங்கி வருகின்றன.

இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர். நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் மேலும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே இவ் விடயங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் தற்போது குறைந்த வருமானம் பெறுகின்றவர்களுக்கு வழங்கி வருகின்ற அரச நிவாரண கொடுப்பனவான 5,000 ரூபாய் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here