அரசாங்கத்தில் இருந்து கொண்டு இன்று அமைச்சர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சர்வகட்சி மகா நாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்று வீர வசனம் பேசி வருகின்றனர். அரசாங்கத்தில் இருக்கும் போது சர்வ கட்சி மகா நாட்டினை கூட்டி மக்கள் அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் என்று கூக்குரல் இட்டவர்களும், இவர்களே ஆனால் இன்று அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வ கட்சி மகா நாட்டிக்கு அழைக்கும் போது வரமாட்டோம் என்று வீர வசனம் பேசி மக்களை ஏமாற்றுவதற்காக இரட்டை வேடம் போடுகின்றனர் ஆகவே மக்கள் இவர்களை இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவருமான பெரியசாமி பிரதீபன் வேண்டுகோள் விடுத்தார்.
ஹட்டனில் இன்று (22) திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
இன்றுள்ள அரசியல் தலைவர்கள் மக்களை திசை திருப்புவதற்காக தங்களின் சுகபோக வாழ்க்கைக்காகவும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசாங்கத்தின் சலுகைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர் இவர்கள் உண்மையான மக்கள் பற்று இருந்தால் ஒன்று அரசாங்கத்தில் இருந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் இல்லாவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகி விட்டு விமர்சிக்க வேண்டும் இவை இரண்டையும் செய்யாது தங்களது சுயநலத்திற்காக செயற்படுவது இவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக தவிர வேறு ஒன்றுக்கும் அல்ல என தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்த போதிலும் அதனை கம்பனிகள் பெற்றுக்கொடுப்பதில்லை அவ்வாறே கொடுத்தாலும் கூட அந்த ஆயிரம் ரூபா தற்போது உள்ள விலைவாசிக்கு ஏற்றதாக இல்லை எனவே தோட்டத்தொழிலாளர்களுக்கு 2500 ரூபா நாட் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அதனை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்