“மக்கள் விரோத அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தொடர்ச்சியாக வீதிக்கு இறங்கி போராட வேண்டும்” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
அட்டனில் (26ஆம் திகதி) இடம் பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் தெரிவித்ததாவது:
“எமது நாட்டில் இன்று அராஜக ஆட்சியொன்று இடம் பெறுகின்றது.
எமது நாட்டில் வாழ்கின்ற சகல மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் நாளுக்கு நாள் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய திராணியற்றவர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.
அரசாங்கத்தின் கடன் சுமை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து விரக்தி நிலையில் உள்ளனர்.
இந்த அரசாங்கம் குறித்து நாம் வீட்டிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து பிரயோசனமில்லை.
வீதியில் இறங்கி போராட வேண்டும்.
அந்தவகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா கலந்து கொள்ளும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு தலவாக்கலை நகரில் இடம்பெறவுள்ளது.
இந்த உணர்வுபூர்வமான போராட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த சகல மக்களும் அணி திரண்டு கலந்து கொள்ள வேண்டும்.
இந்தப் போராட்டத்தின் ஊடாக மக்கள் விரோத அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு நாம் உந்து சக்தியாக இருக்க வேண்டும்”
என்றார்.