அமெரிக்காவின் வரி அதிகரிப்பு தொடர்பிலே அனைவரும் கதைக்கின்றனர், ஆனால் அரசாங்கம் மக்களுக்கு அதிகரித்துவரும் வரிகள் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது நாளுக்கு நாள் வரி அதிகரித்து வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்ன தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதியினால் விதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கு 44 வீத தீர்வை வரி தற்போது 30 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நாடு என்ற ரீதியில் எந்தளவு வரி குறைக்கப்பட்டாலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதனால் நாட்டுக்கே நன்மை கிடைக்கும். அதேபோன்று தற்போது விதித்திருக்கும் 30 வீத வரியுடன் ஏற்கனவே இருந்த நூற்றுக்கு 16வீத வட் வரியும் சேர்க்கப்படும் என ஜனாதிபதியின் பொருளாதாரம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவிக்கிறார். ஆனால் இதுதொடர்பில் அரசாங்கம் எதனையும் தெரிவிப்பதில்லை.
அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால், அது எமது நாட்டின் தொழிற்சாலைகளுக்கே பாரிய பாதிப்பாக அமையும். குறிப்பாக ஆடை தொழிற்சாலைகள் வீழ்ச்சியடைந்தால், பாரியளவில் தொழில் இல்லாத பிரச்சினை ஏற்படும். அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் அரசியல் லாபம் தேட முயற்படுவதில்லை. எங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால் அரசாங்கம் தலைக்கனம் பிடித்ததுபோன்றே செயற்பட்டு வருகிறது.
அதேநேரம் அமெரிக்கா வரி அதிகரிப்பது தொடர்பில் அனைவரும் கதைக்கின்றனர். ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் மக்களுக்கு அதிகரித்துள்ள வரி தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. மக்களுக்கு சுமையாக இருக்கும் வரிகளை குறைத்து நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வரிகள் மற்றும் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இளைஞர்களின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புதிதாக டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு நூற்றுக்கு 18வீத வரி வித்திருக்கிறது.அதேபோன்று எரிபொருள் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண அதிகரிப்பு, பால்மா விலை அதிகரிப்பு, சுகாதாரத்துறை கட்டண அதிகரிப்பு என அனைத்து துறைகளிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் இதுவரை காலத்துக்கும் பஸ் கட்டணத்தை பூச்சியம் தசம் 55 வீதத்தால் குறைத்துள்ளது என்றார்.