ஒட்டுமொத்த அரசாங்க சேவையையும் மறுஆய்வு செய்து அரச சேவைக்கு முறையான சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், தொழில்முறை மேம்பாட்டை உயர்த்தும் நோக்கில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவர்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவால் நியமிக்கப்பட்ட உபகுழு, தொழிற்சங்கங்களின் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் பெற்றுக்கொண்டது.
இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி தலைமையில் அண்மையில் (11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கருத்துக்கள் பெறப்பட்டன.
ஒட்டுமொத்த பொது சேவையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தமது சேவைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
மேலும், உபகுழுவின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், அமைச்சரவை ஆலோசனைக்குழுவிற்கு இரண்டு வாரங்களுக்குள் தமக்குள்ள கருத்துக்களையும், பரிந்துரைகளையும் சமர்ப்பிக்க அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறினார்.
ஒட்டுமொத்த அரசாங்க சேவையில் உள்ள பணியாளர்களுக்கு முறையான, விஞ்ஞான ரீதியான சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், அவர்களது தொழில்முறை மேம்பாட்டை உயர்த்துவதற்கான சேவைக் கட்டமைப்புச் சட்டங்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தற்போதைய நிலைமைகளை மேலும் நியாயமான முறையில் மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அரசாங்க சேவைக்கு முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரித்தல் மற்றும் தொழில்முறை மேம்பாட்டை உயர்த்துவதற்கான திட்டமொன்றையும், அதற்கான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்குத் தேவையான முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் அடங்கிய அறிக்கையைத் தயாரித்து பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கும் நோக்கிலேயே பாராளுமன்றத்தில் உபகுழு கூடி ஆராய்ந்து வருவதாகக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜந்த கம்மெத்தெகே, தினிந்து சமன் ஹென்னாயக்க, சட்டத்தரணி கீதா ஹேரத் ஆகியோருடன் பல அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.