தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவை தெரிவிக்கிறது. இங்கே விவாதிக்கும் அதேவளை, சமகாலம் மற்றும் கடந்த கால செயல்முறைகள் இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் தற்போது மட்டுமல்லாது, கடந்த காலங்களிலும் கூட, பொலிஸ் மா அதிபர் பதவிக்கு இவர் தகுதியற்றவர் என்று நேரடியாகவே நடத்தை மூலம் தெரிவித்துள்ளது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான முன்மொழிவு அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நானும் ஐக்கிய மக்கள் சக்தியினைச் சேர்ந்த கபீர் ஹாஷிமும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். இச்சமயம் மக்கள் விடுதலை முன்னனணியும் தேசிய மக்கள் சக்தியும் மௌனம் காக்கும் கொள்கையை கடைப்பிடித்தது. இது தொடர்பில் எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக இன்று (05) நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அன்று அரசியலமைப்பு பேரவையில் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறினர். அன்று ஜே.வி.பி இது தொடர்பாக தனது கருத்துக்களை வெளியிடவில்லை. மௌனம் காத்து வந்தது. அமைதியாக இருந்தது. ஐக்கிய மக்கள் சக்தி கனம் நீதிமன்றத்தின் முன் அடிப்படை உரிமைகள் மனுக்களைக் கொண்டு வந்தபோது கூட, தற்போதைய அரசாங்கம் ஒழிந்திருக்கும் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு மௌனம் காத்து வந்தது. இந்த சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு முரணான செயலுக்கு அன்று தொட்டே ஐக்கிய மக்கள் சக்தி எதிராகவே இருந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அன்று, அப்போதைய பிரதமர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குறைமதிப்புக்குட்படுத்தி, சவால் விடுத்து உரை நிகழ்த்தினார். இருப்பினும், NPP மற்றும் JVP பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர். அரசியலமைப்பு பேரை வலுவானதாக இருந்தமையினாலயே அப்போது இதுபோன்ற சம்பவத்திற்கு எதிராக செயல்பட முடிந்தது. தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பு பேரவையின் அதிகாரத்தைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றது. இவ்வாறு ஒன்று நடந்தால், இந்த அரசாங்கத்திற்கும் கோட்டாபய அரசாங்கத்திற்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் எந்தவொரு விடயத்தையும் முன்னெடுக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.