மக்கள் விடுதலை முன்னணியை போன்று நாங்கள் வைராக்கியத்துடன் செயற்படவில்லை. அரசியல்வாதிகள் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளானால் அவர்களுக்காக முன்னிலையாகுவோம். விசாரணைகளுக்காக திட்டமிட்ட வகையில் அரசியல்வாதிகள் வெள்ளிக்கிழமை அழைக்கப்படுகிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியல் பழிவாங்களுக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கும்,எமக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையடைந்த போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் நாட்டை பொறுப்பேற்றார். ஆகவே அதற்கான கௌரவத்தை அவருக்கு வழங்க வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது எதிர்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இருப்பினும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் சட்டவிரோதமான விடுவிக்கப்பட்ட விவகாரம் மறக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்போம் ஏனெனில் நாங்கள் மக்கள் விடுதலை முன்னணியல்ல, வைராக்கியத்துடன் செயற்படுவதற்கு. ஜனநாயகத்
தை பாதுகாப்பதற்கும், அரசியலமைப்புடனான அரசாங்கத்தின் சர்வாதிகாரத்தையும் தோற்கடிப்பதற்கு நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை ஒரு நாளாவது சிறையில் அடைத்தோம் என்று பெருமைக்கொள்வதற்காகவே எதிர்தரப்பினர் விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வெள்ளிக்கிழமையில் அழைக்கப்படுகிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்ற விடுமுறை என்பதால் பிணை கிடைக்காது. ஆகவே திட்டமிட்ட வகையில் வெள்ளிக்கிழமையன்று கைதுகள் இடம்பெறுகின்றன என்றார்.