அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றிணைவோம்.

0
146

“அரசாங்கத்தின் அசமந்த போக்கால் நாட்டு மக்கள் நடுரோட்டில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றிணைவோம்.” என கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதி செயலாளர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

நாடு வரலாறு காணாத பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது. மக்களின் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பல்வேறு வழிகளில் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றைய அரசாங்கத்தின் அசமந்த போக்கால், நாட்டு மக்கள் நடுரோட்டில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்றைய அரசாங்கம், நாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. நாளாந்த தேவைகளுக்கு அவசியமான சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், உட்பட அனைத்து எரிபொருட்களையும் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தாம் உயிர்வாழ்வதற்காக பொருட்களை வாங்க போலின்களில் நின்று தமது உயிரை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவர்கள் தமது ஓய்வு காலத்தை நிம்மதியாக செலவிடுவதை விடுத்து போலின்களில் நின்று, நெரிசல்களில் அகப்பட்டு, உயிரை விடும் துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மறுபுறமாக போலின்களில் தோன்றியுள்ள மோதல்கள், கைகலப்புகளை தாண்டி, கொலை செய்யும் நிலைக்கு சென்றுள்ளது. இது நாடு மிக மோசமான நிலையை நோக்கி சென்றுக்கொன்றிருக்கின்றது என்பதையே காட்டுகின்றது.

மக்கள் பல்வேறு வழிகளிலும் மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளனர். ஒரு புறம் தமது வருமான வழிகளை இழந்துள்ளனர். மறுபுறம் பொருட்களின் விலைவாசிகள் என்றும் இல்லாதவாறு பல மடங்கு அதிகரித்ததுள்ளது. பொருள் தட்டுப்பாட்டால் நாள் முழுவதும் போலின்களில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் தொழிலிற்கு செல்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்சினை, எழுது கருவி பிரச்சினை என தொடருகின்றது. இவை பாரிய மக்கள் போராட்டமொன்று வெடிக்கும் நிலைமையை ஏற்படுத்தி வருகின்றது.

அரசாங்கத்தின் கொள்கை வகுப்புக்கள், திட்டமிடல்கள் தோல்வியடைந்துள்ளது. உரிய காலத்தில் தீர்மானங்களை எடுக்காமை, அனைத்திற்கும் பிற்போடப்பட்ட, காலம் தாழ்த்திய, அசமந்த போக்கினை கடைப்பிடித்தமை, இன்று இந்நிலைமையை தோற்றுவித்துள்ளது. எனினும் அரசாங்கம் இதனை புரிந்துகொண்டுள்ளதாக தெரியவில்லை. மேலும் மேலும் தற்காலிக மூடி மறைப்புகளை செய்வதையே அரசங்கம் முன்னெடுத்து வருகின்றது. அரசாங்கத்தின் இம்மூடி மறைப்பை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து மேலும் மோசமான நிலைமை தோன்றுவதை தடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலவாக்கலை நகரில் நடைபெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here