ஆண் அரசு ஊழியர்கள் அனைவரும் தாடி வளர்க்க வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற்ற பிறகு தாலிபான்கள் படையெடுத்து வந்து ஆட்சியைக் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் கீழ் ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆப்கானிஸ்தானில் ஏரியானா ஆப்கன் மற்றும் காம் ஏர் என 2 முக்கிய நிறுவனங்கள் விமான போக்குவரத்து சேவையை அளித்து வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு, பெண்கள் தனியே பயணம் செய்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆண் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் தாடி வைத்திருந்தால் மட்டுமே அலுவலங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இதையடுத்து அமைச்சரவை அலுவலகத்திற்குள் தாடி வைக்காமல் சென்ற அரசு ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனிடையே இந்த உத்தரவுக்கு தலிபான் ஆதரவாளர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.