ஆசியான் பிராந்திய மன்றத்தின் உறுப்பு நாடுகளுடன் மிக நெருக்கமாக செயற்படுவதில் இலங்கைக்கு விருப்பம்!

0
3

2025–2026 காலப்பகுதியில் அமைதி காக்கும் முயற்சிகளில் ஆசியான் பிராந்திய மன்றத்தின் உறுப்பு நாடுகளுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட இலங்கை விரும்புவதாக அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் (ஜூலை 11) நடைபெற்ற 32வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.

இதன்போது ஆசியான் பிராந்திய மன்றத்தின் முக்கிய முன்னுரிமைகள், குறிப்பாக அமைதி, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சகல விடயங்களையும் உள்ளடக்கிய பொருளாதாரச் செழுமையை மேம்படுத்துவதில் இலங்கையின் வலுவான அர்ப்பணிப்பை அமைச்சர் ஹேரத் மீண்டும் வலியுறுத்தினார்.

தனது உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் பகுதியொன்றாக, அமைச்சர் ஹேரத் 2025, ஜூலை 10 அன்று புத்ராஜயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மலேசியப் பிரதமர் மேதகு டத்தோ சேரி கலாநிதி அன்வர் பின் இப்ராஹிமை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்த பயனுறுதிமிக்க கலந்துரையாடலொன்று அவர்களிருவருக்குமிடையில் நடைபெற்றது.
குறிப்பாக, இலங்கை நாட்டினருக்கு வீசா இல்லாத பயணத்தை செயற்படுத்துவது மற்றும் மலேசியா முழுவதும் பல்வேறு துறைகளில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு 10,000 தொழில் ஒதுக்கீடுகளை மேற்கோள்வது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது பிரதமர், மனிதவள அமைச்சு மற்றும் மலேசியாவின் உள்துறை அமைச்சின் அதிகாரிகளிடம், இலங்கைத் தரப்போடு கலந்தாலோசித்து, தொழிலாளர் தொடர்பான விடயங்களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு அறிவுறுத்தினார்.

பிரதமர் இப்ராஹிமுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர் ஹேரத் மலேசிய மனிதவள அமைச்சின் பொதுச் செயலாளர், மலேசியாவின் உள்துறை அமைச்சின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்து, இலங்கைத் தொழிலாளர்களின் நலனுக்காக முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை செயற்படுத்துவது தொடர்பிலும், வீசா இன்றிய பயண ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினார். இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான முதல் பணிக்குழு 2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் நிறுவப்படும் என்றும், இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான வீசா விலக்கு துரிதப்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான பரஸ்பர வீசா இன்றிய பயண ஏற்பாடு பரிசீலிக்கப்படும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

2025, ஜூலை 11 அன்று கோலாலம்பூரில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கை முதலீட்டாளர், வர்த்தகம் மற்றும் சுற்றுலா மன்றம் 2025” இல் அமைச்சர் ஹேரத் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட மலேசியாவின் முக்கிய முதலீட்டாளர்கள், முன்னணி வர்த்தக சபைகள் மற்றும் போக்குவரத்துத்துறைப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்தனர். மலேசியாவின் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறைக்கான பிரதி அமைச்சரும் சிலாங்கூர் அரச குடும்பத்தவருமான மேன்மை தங்கிய டுங்கு மகா குனியன் திராஜா டுங்கு சைஃபன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2025, ஜூலை 12 அன்று, மலாக்காவில் உள்ள இஸ்தானாவில், மலாக்கா மாநிலத்தின் ஆளுநர் மேன்மை தங்கிய துன் சேரி சேத்தியா கலாநிதி ஹாஜி முகமது அலி பின் முகமது ரஸ்தம் ஐ அமைச்சர் ஹேரத் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இலங்கைக்கும் மலாக்கா மாநிலத்திற்கும் இடையிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு பிரமுகர்களும் பயனுறுதிமிக்க கலந்துரையாடல்களை நிகழ்த்தினர். மலாக்கா நகரில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களையும் அமைச்சர் ஹேரத் பார்வையிட்டார்.

ஆசியான் பிராந்திய மன்றத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களுடனும், தென் கொரியாவின் முதல் துணை அமைச்சருடனும் கௌரவ அமைச்சர் ஹேரத் பல சந்திப்புகளை நிகழ்த்தினார்.

அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலாளர் திருமதி அலிசன் ஹூக்கருடன் நடைபெற்ற சந்திப்பில், இலங்கையின் ஏற்றுமதியில், குறிப்பாக ஆடையுற்பத்தித் துறையில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, வரிகளைக் குறைப்பது குறித்த மேலதிகப் பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை அமைச்சர் ஹேரத் எடுத்துரைத்தார். இவ்விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி சமரி ரோட்ரிகோ மற்றும் கோலாலம்பூரில் உள்ள இலங்கையின் பதில் உயர் ஸ்தானிகர் திரு. எம்.ஐ. முகமது ரிஸ்வி ஆகியோர் கௌரவ அமைச்சருடன் சென்றிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here