ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்: இந்திய வீரருக்கு வெண்கலம்

0
4

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரமேஷ் புதிஹால் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 6-வது நாளான நேற்று முன்தினம் ஆடவர் ஓபன் கால் இறுதி சுற்று ஹீட் 1-ல் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் 14.84 புள்ளிகளை குவித்து முதலிடம் பெற்றார். இதையடுத்து நடைபெற்ற அரை இறுதியில் ரமேஷ் புதிஹால் ஹீட் 1-ல் 11.43 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய சர்ஃபர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் நேற்று காலை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ரமேஷ் புதிஹால் 12.60 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்றார். இந்த பிரிவில் முதல் 2 இடங்களை முறையே தென் கொரியாவின் கனோவா ஹீஜே (15.17 புள்ளிகள்), இந்தோனேசியாவின் பஜார் அரியானா (14.57) ஆகியோர் பிடித்தனர்.

மகளிர் பிரிவில் ஜப்பானின் அன்ரி மாட்சுனோ 14.90 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். வெள்ளி பதக்கத்தை மற்றொரு ஜப்பான் வீராங்கனையான சுமோமோ சாடா (13.70 புள்ளிகள்) கைப்பற்றினார். இதே பிரிவில் தாய்லாந்து வீராங்கனை இசபெல் ஹிக்ஸ் 11.76 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here