ஏறத்தாழ 7 வருடங்களுக்கு முன்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக வட்டக்கொடை மேற்பிரிவு தோட்டத்திற்கு கலாச்சார மண்டமொன்று அவசியம் என மக்கள் வைத்த கோரிக்கையால் இருபது இலட்ச ரூபா நிதி ஒதீக்கீட்டில் கட்டப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.வட்டக்கொடை மேற்பிரிவு தோட்டத்தில் திருமண வைபவங்கள் உட்பட கோவில் தொடர்பான வைபவங்களுக்கு மண்டபம் தேவை என்றப்படியால் மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க இம்மண்டபம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று அம்மண்டபம் எவ்வித பாவணையும் இன்றி ஆடுகளின் தொழுவமாக மாறியுள்ளதாக வட்டக்கொடை மேற்பிரிவு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த மண்டபத்தை சூழ ஆடுகள் காணப்படுவதும், ஆட்டு கழிவுகளால் குறித்த மண்டபம் அசுத்தம் நிரம்பி காணப்படுவதாகவும் தெரிவிப்பதோடு இரவானதும் பன்றிகளின் இருப்பிடமாக இம்மண்டபம் மாறிவிடுவதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மண்டபம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்டிக்கொடுத்தப்படியால் மண்டபத்தின் சாவியை வைத்துக்கொண்டு பொதுசேவைகளுக்கு பயன்படுத்த மறுப்பு தெரிவிக்கின்றப்படியால் அம்மண்டபத்தை கோருவதில்லை அதனால் அப்படியே கைவிடப்பட்டுள்ளது.இம்மண்டபம் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் காலத்தில் வட்டக்கொடை மேற்பிரிவு மக்களுக்காக கட்டிக்கொடுத்தது.ஆனால் இ.தொ.காவின் தோட்ட தலைவர் மார்களின் பிற்போக்கான செயலால் தற்போது விலங்குகளின் இருப்பிடமாக இம்மண்டபம் மாறியுள்ளது.எனவே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையிட்டால் மாத்திரமே இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்குமென ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டம் கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்டப்படியால் இது தொடர்பில் வட்டக்கொடை மேற்பிரிவு வட்டார உறுப்பினர் விஜயகுமாரிடம் வினவியபோது குறித்த மண்டபத்தின் சாவி தன்னிடமே உள்ளது.மக்களுக்காக கட்டப்பட்ட மண்டபம் ஆனால் அதை தோட்டத்திலுள்ளவர்கள் சிலர் அபகரிக்க முற்பட்டனர்.அதனால் சாவியை தான் வைத்துள்ளேன்.மேலும் கோயில் பணிகளுக்காகவும்,தோட்ட வைபவங்களுக்காகவும் கட்டப்பட்டு கையளிக்கப்பட்ட மண்டபத்தை மக்கள் பயன்படுத்த முன்வரவில்லை.அதனால் கொட்டக்கலை பிரதேச சபையூடாக இரண்டரை இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மண்டபத்தின் உட்புறத்தே குறித்த தோட்ட கிராமசேவகர் காரியாலயம்,சமூர்த்தி காரியாலயம் போன்றவற்றை அமைக்க பகுதி பகுதியாக பிரித்தேன்.மண்டபத்தின் பாதுகாப்புக்காக பத்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் மதில் ஒன்றையும் அமைத்துள்ளேன்.மண்டபத்துக்கு பாதுகாப்பு வேலி கோரி கொட்டக்கலை பிரதேச சபையில் நிதி கோரியுள்ளேன்.ஆனால் ஒரு சிலர் மண்டபத்தினுள்ளே காணப்பட்ட பொருட்களை களவாடி சென்றுவிட்டதாக குறிப்பிட்டார்.
இருப்பினும் இன்று சில மாதங்களின் குறித்த மண்டபத்தில் அனைத்து சீர்த்திருத்த வேலைகளும் முடிக்கப்பட்டு மீண்டும் மண்டபம் கையளிக்கப்படுமென குறித்த வட்டார உறுப்பினர் விஜயகுமார் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் குறிப்பிடுகையில் இம்மண்டபம் குறித்த பிரச்சனை தொடர்பில் பல தடவைகள் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.ஆனால் கொரோனா சூழ்நிலையாலும் பிரதேச சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவாக கிடைக்கின்றமையினாலும் குறித்த மண்டபத்துக்கான நிதியை வழங்க முடியாது உள்ளது.எனவே முடிந்தவரை விரைவில் குறித்த மண்டபத்தை மீள செப்பனிட்டு மக்கள் பாவனைக்கு உட்படுத்தும் வகையில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
நீலமேகம் பிரசாந்த்