ஒருநாள் கிரிக்கெட்டில் 498 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் நெதர்லாந்தை மிரட்டிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சால்ட், மலான், பட்லர் ஆகியோர் சதம் பதிவு செய்துள்ளனர்.
கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டில் புதியதொரு சாதனையை படைத்துள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிராக 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 498 ரன்களை எடுத்ததன் மூலம் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது அந்த அணி. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது.
இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2018 வாக்கில் 481 ரன்களை குவித்திருந்தது. அதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று வரை ஒரே இன்னிங்ஸில் ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ரன்களாக. இப்போது அதனை இங்கிலாந்து அணியே தகர்த்துள்ளது.
நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஓவருக்கு 9.96 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை குவித்தது இங்கிலாந்து. 26 சிக்ஸர்கள் மற்றும் 36 பவுண்டரிகள் இதில் அடங்கும். இங்கிலாந்து அணிக்காக அதிகபட்சமாக 70 பந்துகளில் 162 ரன்களை குவித்தார் பட்லர். மலான் 125 ரன்களும், சால்ட் 122 ரன்களும் பதிவு செய்தனர். லிவிங்ஸ்டன், 22 பந்துகளில் 66 ரன்களை குவித்து மிரட்டினார். இங்கிலாந்து இன்னிங்ஸின் ஒவ்வொரு பந்தும் மேட்ச் ஹைலைட் பார்ப்பது போல அமைந்திருந்தது.
ஒருநாள் கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து என்பதை உரக்க சொல்லும் வகையில் இந்த ஆட்டம் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிரடியாக ரன் சேஸ் செய்து மிரட்டி இருந்தது இங்கிலாந்து. இப்போது மற்றொரு சாதனையை படைத்துள்ளது அந்த அணி. இங்கிலாந்து இந்த சாதனையை கிரிக்கெட் உலகமே போற்றி வருகிறது.