இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமையான புலி வாலை பிடித்த செயலுக்கு ஒப்பானதாகும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களையும் அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
76 வருடகால சாபக்கேடு எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள்தான், சாபக்கேடான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதுதான் நாட்டுக்கு சாபக்கேடாகும்.
ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் எமக்கு தெரியாது. ஆனாலும் பாதுகாப்பு ஒப்பந்தம் என அரசாங்கம் கூறியுள்ளது. எந்தவொரு நாட்டுடனும் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
பலம்பொருந்திய நாட்டுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டால் அதில் இருந்து தன்னிச்சையாக விலக முடியாது. எனவே, இது புலி வாலை பிடித்த செயலுக்கு ஒப்பானதாகும். இது விடயத்தில் நான் மாயையை தோற்றுவிக்கவில்லை. தர்க்க ரீதியிலான கருத்தகளையே முன்வைத்துள்ளேன்.” – என்றார்.