இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பயங்கர துப்பாக்கி சண்டை

0
19

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் கடந்த மே 10ம் திகதி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு முதல் முதலாக பாகிஸ்தான் தூண்டுதலால் புதன்கிழமை (12) இரவு ஜம்மு காஷ்மீரில் இருநாடுகளின் எல்லையில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் நம் நாட்டின் ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7 ம் திகதி நம் நாட்டின் சார்பில் ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளம், விமானப்படை தளம் அழிக்கப்பட்டது. பாகிஸ்தானும் பதிலுக்கு தாக்க முயன்று தோற்றுப்போனது.

இதனால் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. மே 10ம் திகதி நடத்திய தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் போரை நிறுத்த கெஞ்சியது. இதையடுத்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இருப்பினும் ‛ஆபரேஷன் சிந்தூர்’ முடியவில்லை. பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று நம் நாடு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தான் போர் நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக எல்லையில் புதன்கிழமை (12) கடும் துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே நேற்று இரவு வழக்கம்போல் நம் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து ஒருவர் எல்லையை கடந்து நம் நாட்டுக்குள் ஊடுருவ முயன்றார். இது வழக்கமான ஊடுருவல் முயற்சியில் இருந்து வேறுபட்டு இருந்தது.

ஊடுருவ முயன்ற நபரை நம் ராணுவ வீரர்கள் தடுக்க முயன்றனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் நம் நாட்டின் வீரர்கள் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் நம் வீரர்களும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் நம் நாட்டின் வீரர் ஒருவர் காயமடைந்தார். இதற்கிடையே இரவு நேரம் உள்பட மோசமான காலநிலையை பயன்படுத்தி நம் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற நபர் மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்பி சென்றார்.

இதற்கிடையே பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நம் ராணுவ வீரர் மரணடைந்தார். இதனால் இருநாடுகள் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here