சூர்ய குமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தால் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி ரி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான தீர்க்கமான போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காது 51 பந்துகளில் 112 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 9 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
சுப்மன் கில் 46 ஓட்டங்களையும் மற்றும் ராஹுல் திரிபதி 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.பந்து வீச்சில் டில்சான் மதுசங்க இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அதன்படி, 229 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் தசுன் சானக்க மற்றும் குசல் மெந்திஸ் ஆகியோர் தலா23 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் அர்ஷ்தீப் படேல் மூன்று விக்கெட்டுக்களையும் ஹர்திக் பாண்டியா, உம்ரன் மலிக் மற்றும் யுஸ்வந்தர சஹால் ஆகியோர் தல இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இந்தப்போட்டியின் ஆட்டநாயகனாக சூரியகுமார் யாதவ், தொடர் நாயகனாக அக்சர் பட்டேல் தெரிவாகினர்.
2019 ஆம் ஆண்டு முதல் சொந்த மண்ணில் 11 இருதரப்பு தொடர்களில் தோற்கடிக்கப்படாத அணியாக இந்திய அணி திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.