பெருந்தோட்ட மக்களுக்கு 2000 தனி வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (12) பண்டாரவளை பொது மைதானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.
இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகளுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், 2,000 வீடுகள் இந்த நிகழ்வின் போது பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களால் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டம், தோட்ட சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது வீட்டுவசதி வழங்குவது மாத்திரமன்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் கண்ணியமான குடிமக்களாக தோட்டத் தொழிலாளர்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலைநாட்டு மக்களின் வாழ்க்கை தர நிலைமைகளை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நன்கு பொருத்தப்பட்ட வீட்டு வசதிகளை வழங்குவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.
பயனாளிகளை அடையாளம் காண்பதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு விசேட தேர்வு செயல்முறையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பல இந்திய அரசாங்க பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.