யாழ். தையிட்டி, திஸ்ஸ விகாரையை மையப்படுத்தி வடக்கிலும், தெற்கிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் நிறுத்தப்பட்டால் அப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டில் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை. அதனை ஒடுக்குவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
‘திஸ்ஸ விகாரையை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படும் அரசியல் நிறுத்தப்பட வேண்டும். விகாரையின் விகாராதிபதி, அந்த பகுதியில் வாழும் மக்கள், நாக விகாரையின் விகாராதிபதி ஆகியோர் ஒன்றிணைந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
அரசியல்வாதிகள் தான் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண இடமளிப்பதில்லை. இனவாதம் இவர்களுக்கு தேவை.” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் எவ்விடத்தில் தொல்பொருள் சின்னங்கள், அடையாளங்கள் கிடைக்கப்பெற்றாலும் அவற்றை மதம் மற்றும் இன அடிப்படையில் பார்க்ககூடாது. தொல்பொருள் மரபுரிமை அடிப்படையில் தான் அவற்றை பார்க்க வேண்டும்.
ஆனால் இனவாதிகள் தொல்பொருள் சின்னங்களை பௌத்தமா அல்லது இந்துவா என்றே பார்க்கிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு இனவாதம் வேண்டும். இனவாதிகளை மக்கள் தோற்கடித்தார்கள்.இருப்பினும் அவர்கள் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.
இனவாதம் மீண்டும் தலைதூக்குமாயின் அதனை இல்லாதொழிக்க அரசாங்கம் என்ற அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்.” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.