இன்று அமரர் வி.கே.வெள்ளையனின் 103 ஆவது பிறந்த தினம்

0
192

தொழிலாளர்களின் மூச்சில் வாழ்ந்த மாமனிதர். எவ்வித எதிர்பார்ப்புக்களுமின்றி தொழிலாளர்களின் நலனுக்காக அயராது உழைத்து பல உரிமைகளை வென்றெடுத்து வெற்றிவாகை சூடியவர். இன்று அவரின் 103வது பிறந்த தினத்தை நினைவு கூருகிறோம். இவர், 1918ம் ஆண்டு நவம்பர் 28ம் திகதி பொகவந்தலாவை முத்துலெச்சுமி தோட்டத்தில் காளிமுத்து பேச்சியம்மா தம்பதிகளுக்கு இளைய மகனாகப் பிறந்தார். வெள்ளைக்காரனை போன்ற தோற்றம் கொண்டதால் வெள்ளையன் என பெயர் சூட்டப்பட்டதாக ஒரு கதை உள்ளது.

இவர், தனது ஆரம்பக் கல்வியை கெம்பியன் தோட்டப் பாடசாலையிலும், உயர்கல்வியை பொகவந்தலாவை சென். மேரிஸ் கல்லூரியிலும். கண்டி திரித்துவக் கல்லூரியிலும் கற்றார். லண்டன் மெற்றிக்குலேசன் பரீட்சையிலும் சித்திபெற்றவர். இவர் கல்விகற்ற காலத்தில் நல்லொழுக்கம் நிறைந்தவராகவும், சகல துறைகளிலும் சிறந்து விளங்கினார். ரகர் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் இவர் ‘ரகர் லயன்’ என்றும் அழைக்கப்பட்டார்.

1940ம் ஆண்டு கல்வியை முடித்துக்கொண்டு கல்லூரியிலிருந்து வெளியேறினார். இவரின் தந்தை பெரியங்கங்காணி என்பதால் கொஞ்சம் செல்வந்தராக இருந்தார். தனது பிள்ளை மிகவும் திறமை கொண்டவராகவும் வாட்டசாட்டமான தோற்றத்துடனும் ஆங்கிலப் புலமையுடனும் இருந்ததால் இவரை தோட்ட முகாமையாளராக்க வேண்டுமென்ற அவா தந்தையின் நெஞ்சில் எழுந்தது. எனினும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இவ்வாறான வசதிகள் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட வெள்ளையன், தனது படிப்புத்திறமை அனைத்தையும் தொழிலாளா்களுக்கே பயனளிக்கும் விதத்தில் அர்ப்பணிக்க முடிவு செய்தார். இதேசமயம் தந்தையார் தனது விருப்பத்தை தோட்ட முகாமையாளரிடம் தெரிவித்தார். முகாமையாளர் அது சாத்தியமே இல்லை என வேண்டுகோளை முற்றாக நிராகரித்தார்.

அதனைத் தொடர்ந்து நண்பர்களின் ஆலோசனைக்கமைய பொலிஸ் மேலதிகாரி பதவிக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சையில் சித்திபெற்றார் வெள்ளையன். தொழிலுக்காக காத்திருந்த அவருக்கு ஒரு நாள் நியமனக் கடிதமும் வந்தது. ஆவலுடன் அக்கடிதத்தை பிரித்துப் பார்த்தபோது அதில், உங்களுக்கு பொலிஸ் மேலதிகாரி பதவிக்கான சகல தகைமைகளும் இருந்தபோதும் நீங்கள் ஒரு இலங்கைப் பிரஜையாக இல்லாத காரணத்தினால் உங்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றோம் என அறிவித்திருந்தார்கள். அக்கடிதத்தை உடனடியாக கிழித்தெறிந்துவிட்டு கூட்டுறவு சங்கக்கடையின் முகாமையாளராக கடமைக்கு சென்றார் வெள்ளையன்.
அதன்பின் மூத்த தொழிற்சங்கவாதிகள் அமரர் வீ.கே. வெள்ளையனை தங்கள் அமைப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று 1942ம் ஆண்டு இலங்கை, இந்திய காங்கிரஸில் இணைந்து கொண்டார். அன்றிலிருந்து தனது உடல் பொருள் ஆவியனைத்தையும் தொழிலாளர்களுக்கு அர்ப்பணித்தார். தொழிற்சங்கத்துறவி தன்னலம் கருதாத மேதை உயர்ந்த எண்ணம் படைத்தவர். துனிச்சல்மிக்க தொழிலாளியின் தளபதி என பல மேதைகளாலும் தொழில் திணைக்கள அதிகாரிகளாலும் இந்நாட்டு அந்நாள் உயர் நீதியரசர் சண்முகலிங்கம் போன்றோராலும் போற்றப்பட்ட அமரர் வீ.கே. வெள்ளையன் ஒரு தீர்க்கதரிசி என்று கூறினால் அது மிகையாகாது.

இல்லற வாழ்வைத் துறந்து ஒரு பிரமச்சாரியாக இருந்து தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக இரவு பகல் பாராது தொழிற்சங்கத்தின் தொழிலாளர் பிரதிநிதியாக உலகில் பல பாகங்களுக்கும் சென்று தொழிலாளர்களின் நிலையை வெளிப்படுத்தினார். அத்துடன் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில் ஆற்றிய உரை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைக்கு பரிகாரம் தேடும் வகையில் அமைந்திருந்தது. நிர்வாகத்திற்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் தொழிலாளர்களைத் தெரிவுசெய்யு முகமாக அறிவும் ஆற்றலும் துணிவும் கொண்ட தொழிலாளர்களை மாவட்ட பதவிகளுக்கு கொண்டுவந்தார்.

1950ம் ஆண்டு தோட்டங்களில் நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்பட்ட வீ.கே.வெள்ளையன் தோட்டங்கள் தோறும் தொழிலாளர்களை சந்தித்து விடுதலை சிந்தனையை தூண்டினார். அவரின் பேச்சிலும் செயற்பாட்டிலும் தொழிலாளர்களை கவர்ந்தார். இதனால் தொழிற்சங்க துறவியென்றும் பெயரெடுத்தார். இவர் பல தொழிற்சங்கங்களில் உயர் பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்காலகட்டங்களில் இவரது கொள்கைக்கு ஏற்றாற்போல் அத்தொழிற்சங்கங்கள் செயற்படாததால் 1965ஆம் ஆண்டு மே முதலாம் திகதி பல கனவுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தை ஆரம்பித்து அதனூடாக மக்களின் பல உரிமைகள் போராட்டங்கள் மூலம் பெற்றுக் கொடுத்தார். அதில் அனைத்து துறைகளையும் சார்ந்தவர்கள் இன்று உரிமைக்குரல் கொடுத்து பெற்றுக்கொள்ளும் சேவைக்காலப் பணம், ஊழியர் சேமலாப நிதி போன்றவையும் அடங்கும்.

அமரர் வீ.கே.வெள்ளையன் விட்டுச் சென்ற கனவுகளை இன்றைய தலைவர் முன்னாள் அமைச்சர் பழனிதிகாம்பரம் நிறைவேற்றி வருகிறார். அமரர் வீ.கே.வெள்ளையனின் பெயரில் புதிய கிராமங்கள், நினைவு வாசிகசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here