இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட மட்டத்தில் ஆலோசனைகளைப் பெறுவதற்கான ஒரு விசேட நிகழ்ச்சித் திட்டம் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்முயற்சியின் கீழ் அண்மையில் (04) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.
பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் “இயலாமை பற்றிய உணர்திறன் கொண்ட பாராளுமன்றம்” என்ற இலக்குக்கு அமைய, நாடு முழுவதும் இயலாமையுள்ள நபர்களிடமிருந்து நேரடியாகக் கருத்துக்களைப் பெறும் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை மையமாகக் கொண்டு இவ்வாறு நடத்தப்பட்டது.
இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்ச்சியில், ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களும் கலந்துகொண்டார். அத்துடன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரன், முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவி ஆகியோரும், உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள் உட்பட உள்ளூர் அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இயலாமையுள்ள நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இயலாமையுள்ள நபர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்களுடன் இணைந்து, தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையின் கீழ் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்றதுடன், அந்த மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன் அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அவர்கள், சேவைகளைப் பெறுவதற்காக தம்மிடம் வரும் இயலாமையுள்ள நபர்களை மனிதாபிமானத்துடன் கருதி, அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குமாறு அனைத்து அரச அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார். இயலாமையுள்ள நபர்களின் தேவைகளைக் கண்டறிய, அவர்களின் நிலையில் இருந்து பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு உண்மையில் என்ன தேவைகள் உள்ளன என்பதைச் சரியாக அடையாளம் காண முடியும் என்றும், சேவைகளைப் பெற வரும் இயலாமையுள்ள நபர்களின் புன்னகையில் உங்கள் தொழிலில் திருப்தியைக் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள இயலாமையுள்ள நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும், இந்த சட்டமூலத்தில், இயலாமையுள்ள நபர்களின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் (UNCRPD) உள்ள 25 இற்கும் மேற்பட்ட உரிமைகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அதற்கு இணையாக, இயலாமையுள்ள நபர்கள் குறித்த தேசிய கொள்கை மற்றும் தேசிய செயற்திட்டம் என்பனவும் வரைபு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள், இயலாமையுள்ள நபர்களின் தேவைகள் அதிகமாக உள்ள வட மாகாணத்தில் இவ்வாறான ஒரு நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் முக்கியமானது என்றும், பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இயலாமையுள்ள சமூகத்திற்கு அவசியமான சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்காகப் பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார். இயலாமையுள்ள நபர்கள் குறித்த சர்வதேச தினத்திற்கு இணையாக தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், வீதி ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதற்கும், வீதி ஒழுங்குவிதிகளை அமுல்படுத்துவதிலும் பொலிஸாரின் ஒத்துழைப்பு மேலும் தேவைப்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரன் மற்றும் முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவி ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர். இயலாமையுள்ள நபர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் அவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் அந்தக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இயலாமையுள்ள நபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிராந்திய மட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களால் வழங்கப்படக்கூடிய சேவைகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், சமூக சேவை அதிகாரிகளின் பற்றாக்குறை, இயலாமையுள்ள நபர்களுக்காக தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையின் தேவை, வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தல், இயலாமையுள்ள நபர்கள் சுகாதார மற்றும் போக்குவரத்து சேவைகளைப் பெறுவதில் உள்ள சவால்கள், சுயதொழில் செய்யக்கூடிய இயலாமையுள்ள நபர்களுக்கு காணி தேவைகளைப் பூர்த்தி செய்தல், சைகை மொழிபெயர்ப்பு தேவைகள், இயலாமையுள்ள நபர்களுக்கு வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள பிரச்சினைகள், இயலாமையுள்ள மாணவர்களுக்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் தேவை மற்றும் சிறந்த வசதிகளுடன் கூடிய பாடசாலைகள் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் கொள்கை ரீதியான மற்றும் நடைமுறை சவால்கள் குறித்தும் இங்கு விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஒன்றியத்தின் பரிந்துரைகளும் தீர்வுகளும் வழங்கப்பட்டன. இந்தக் கருத்துக்களைப் பெற்றதன் பின்னனர், தேவையான கொள்கை மாற்றங்களுக்காக இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றும் என்று ஒன்றியத்தின் கௌரவ தலைவர் தெரிவித்தார். மாவட்ட மட்டத்தில் சேவைகள் வழங்குவதில் அவை சரியாகச் செயற்படுத்தப்படுவதை உறுதி செய்வது போன்ற விடயங்களில் மாவட்டச் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.




