T20 உலகக் கிண்ணத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சுபர் 12 சுற்றின் இரண்டாவது போட்டியில், மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை அணிசார்பாக குசல் பெரேரா மற்றும் சரித் அசலங்க ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்க தவறினர். எனினும், இறுதிவரை களத்தில் நின்று துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதற்கு உதவியிருந்தார்.
இலங்கை அணிசார்பாக அதிகபட்சமாக குசல் பெரேரா மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா 35 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற பானுக ராஜபக்ஷ 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் பெட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க் மற்றும் அடம் ஷாம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னரின் அதிரடியான துடுப்பாட்டத்துடன் சிறந்த ஆரம்பத்தை பெற்றதுடன், 17 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அதிரடியாக ஆடிய டேவிட் வோர்னர் அதிகபட்சமாக 42 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ஆரோன் பின்ச் 37 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணிசார்பில், வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுகளையும், தசுன் ஷானக ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக, அவுஸ்திரேலிய அணி 4 புள்ளிகளை பெற்றுக்கொண்டு, குழு 1 புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.