நாட்டில் சில பிரதேசங்களுக்கு ஏற்பட்ட வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்திற்கும் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வரட்சியான காலநிலை நிலவி வந்தது இந்த வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் என்றுமில்லாதவாறு குறைவடைந்தன. பல பிரதேசங்களுக்கு குடிநீர்த்தட்டுப்பாடும் ஏற்பட்டன.
இந்நிலையில் ஹட்டன் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு இன்று மாலை ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக ஓரளவு பலத்த மழை பெய்தது.
இந்த மழை காரணமாக காய்ந்து போய் கிடந்த ஓடைகள் கால்வாய்கள்,நீர் நிலைகள் ஆகியன மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளன.
வரட்சிக்காரணமாக பல காடுகளுக்கு தீ வைக்கப்பட்டு காடுகளில் உள்ள தாவரங்கள் மற்றும் மரம் செடிகொடிகள் ஆகிய தீயினால் கருகிப்போயிருந்தன.
இந்த மழையுடன் காடுகளுக்கு தீ வைப்பது குறைவடைவதுடன் மரம் செடிகொடிகள் வளர்வதற்கு ஏதுவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதே வேளை மழையுடன் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் பல பிரதேசங்களில் பனி மூட்டமும் நிலவுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
மலைவாஞ்ஞன்