ஜோர்தான் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று காலை முதல் பிற்பகல் வரை இராணுவ பயிற்சிகள் நடைபெறும் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
பயிற்சியின் போது அப்பகுதியில் இராணுவ வாகனங்களின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் என்றும் இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலையீட்டின் கீழ் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம்,ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நல்லுறவு இல்லை. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல்கள் மற்றும் போர்கள் நடந்துள்ளன.
குறிப்பாக, 1948, 1967 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் நடந்த போர்கள் முக்கியமானவை. இதனையடுத்து, 1994 ஆம் ஆண்டில், இஸ்ரேலும் ஜோர்தானும் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அதன்படி இரு நாடுகளும் இப்போது தூதரக உறவுகளைக் கொண்டுள்ளன. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே இன்னமும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.
குறிப்பாக, பலஸ்தீனப் பிரச்சினை மற்றும் புனித இடங்கள் தொடர்பான பிரச்சனைகளில் இரு நாடுகளும் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளன.
இந்நிலையில் தற்போது இஸ்ரேல் ஜோர்தான் பள்ளத்தாக்கில் இராணுவ பயிற்சிகளை நிகழ்த்தி வருகின்றமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.