பதுளை, அம்பகஸ்தோவ பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.
கொடகும்புர, கந்தே எல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் அம்பகஸ்தோவ பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உள்ள மரமொன்றை இலவசமாக வெட்டுவதற்கு உடன்பட்டுள்ளார்.
பாடசாலையில் உள்ள மரத்தை இலவசமாக வெட்டுவதற்கு உடன்பட்டமை தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகராறில் காயமடைந்தவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 38, 31 மற்றும் 23 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.