இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்!

0
4

ஜோர்தான் இராச்சியத்தின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள யூசஃப் முஸ்தபா அப்துல்கனி மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (25) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இலங்கைக்கும் ஜோர்தானுக்கும் இடையில் சுமார் 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடிக்கும் இராஜதந்திர உறவுகள் பற்றி கௌரவ சபாநாயகர் இச்சந்திப்பில் நினைவுபடுத்தினார்.  எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் ஜோர்தானுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இலங்கையின் ஆர்வம் குறித்து அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பிராந்தியத்தில் நல்லிணக்கம் மற்றும் அமைதியின் முக்கியத்துவத்தை சபாநாயகர் வலியுறுத்தியதுடன், அமைதியை விரும்பும் நாடாக இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், சுற்றுலாத் துறையில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை சபாநாயகர் வலியுறுத்தினார்.

சர்வதேச அரங்கில் ஜோர்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பரஸ்பர ஒத்துழைப்புக் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய தூதுவர் யூசஃப் முஸ்தபா அப்துல்கனி, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது என்ற ஜோர்தானின் உறுதியான நிலைப்பாட்டையும் தெரிவித்தார். ஜோர்தானில் தற்பொழுது சுமார் 15,000 இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும், இவர்கள் முதன்மையான ஆடைத்தயாரிப்புத் துறையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் வருடங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் ஆழமடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை ஜோர்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர், இது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகளை வளர்ப்பதற்கும் சிறந்த பாராளுமன்ற ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் உதவும் என்று கூறினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற நட்புறவு சங்கங்களை மீளஸ்தாபிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இலங்கை – ஜோர்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here