பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் இருந்து மதிய உணவை எடுத்துச் சென்ற சுவீடன் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை நேற்று 19 ஆம் திகதி தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஹோட்டலின் உரிமையாளரும் மற்றுமொரு நபரும் பொத்துவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவை பெற்றுக்கொண்டு 500 ரூபாவை செலுத்தாமல் ஹோட்டலைக் கடந்த சுவீடன் நாட்டு பிரஜை ஹோட்டலுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போதே தாக்கப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுவீடன் பிரஜை தாக்குதலில் இருந்து தப்பிக்க சாலையின் குறுக்கே ஓடும்போது கார் மோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கை நாணயத்தாள்கள் இல்லாத காரணத்தினால் இந்த ஹோட்டலில் காலை உணவுக்கான ஐநூறு ரூபா தொகையை தன்னால் செலுத்த முடியவில்லை என சுவீடன் பிரஜை காவல்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
302,300 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியும், இலங்கை நாணயத்தின் 99,000 ரூபா பெறுமதியான 300 யூரோக்களும் சுவீடன் பிரஜையிடமிருந்து திருடப்பட்டுள்ளதாக அவர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத் அவர்களின் மேற்பார்வையில் அம்பாறைப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜயந்த ரத்நாயக்க அவர்களின் பணிப்புரையின் பேரில் பொத்துவில் காவல்துறை அதிகாரிகள் குழு இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.