நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது.
இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான நேற்றைய தினம் (ஓகஸ்ட் 26) செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.
அகழ்வு தளத்தை பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் குழந்தைகளினுடையது என சந்தேகிக்கப்படக்கூடிய எலும்புகளை கண்டுள்ளனர், எவ்வாறெனினும் தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே இதுத் தொடர்பில் உறுதிப்படுத்தப்படும் என சட்டத்தரணி ரணிதா கூறுகிறார்.
செம்மணி புதைகுழியிலிருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான உடல்கள் அடையாளம் காணப்பட்டது இன்றைய தினமாகும்.
செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை குழந்தைகள் உள்ளிட்ட 166 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
32 நாட்கள் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.