இலங்கையின் கெளரவத்தை ஜெனீவாவில் அரசாங்கம் காட்டிக்கொடுத்துவிட்டதென்று சர்வசன அதிகாரத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவா தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பை கோராமைக்கு காரணம் வாக்கெடுப்பை கோருவதால் எந்தப் பயனும் இல்லை என்பதனாலேயே ஆகும் என்று அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அங்கிருந்த இலங்கைப் பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக்க குறித்த தீர்மானத்தில் உள்ளவற்றை எதிர்ப்பதாக கூறியிருந்தார். அப்படியென்றால், வாக்கெடுப்பு கோரியிருந்தால் வெற்றிப் பெற்றிருக்க முடியாவிட்டாலும் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்க முடியும். மனச்சாட்சிக்கு இணங்க இந்த நாட்டுக்கு ஏற்படக்கூடிய நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும். எமது இராணுவத்தினருக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் ஏற்படக்கூடிய நிலைமையை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் அனைவரும் சுதந்திர இலங்கையராக இருக்க வேண்டும். இந்த சுதந்திர இலங்கை ஆபத்துக்குள் தள்ளப்படக்கூடாது. எமது முழு அடையாளங்களும் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக பொம்மை அரசாங்கமே இப்போது உள்ளது. உலகம் முழுவதும் ஆட்சி மாற்றம் என்று பொம்மை அரசாங்கங்கள் அமைக்கப்படுகின்றன. பலவீனமான அரசாங்கமே இருக்கின்றது. இதனால் வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லாமையே வாக்கெடுப்பை கோராமைக்கு காரணமாகும். உலக நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் எமது கெளரவம் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் எங்களுக்கு ஏற்படுத்தியுள்ள நிலைமைக்கு நீங்கள் முழுமையான பொறுப்புக் கூற வேண்டும்’’ என்றார்.