நாட்டில் கடந்த காலங்களில் தமிழ், முஸ்லீம் காலாசார நடனங்கள் சுதந்திரதினவிழாவை அலங்கரித்தன ஆனால் இலங்கையின் ‘70ஆவது’ சுதந்திரத்தினம் கொண்டாட்டங்களில் லெப்டோப் டான்ஸ் என்ற ஒரு வகை நடனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் “தாமரை மொட்டு” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் முகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் 03.02.2018 அன்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நுவரெலியா நகரில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். இக் கூட்டத்தில் முன்னால் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான ஜீ.எல்.பீரிஸ், முன்னால் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரத்நாயக்க மற்றும் முன்னால் நுவரெலியா மாநகர சபை முதல்வரும் வேட்பாளருமான மஹிந்த தொடங்பேகமகே, மலையக தேசிய முன்னணி தலைவர் ரிஷி செந்தில்ராஜ் உள்ளிட்ட ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதாக வாக்குறுதியளித்தவர்கள் அதனை நிறைவேற்றீனார்களா? இல்லை. ஆகவே மலையக தலைவர்களிடம் அதனை வாங்கி தந்த பின்னர் வாக்கு கேட்கவருமாறு நீங்கள் கேட்கவேண்டும்.
நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில் நுவரெலியாவையும் ஏலத்தில் விற்க ஆதயத்தப்படுகின்றனர்.
தற்போது எல்லா சந்தர்பங்களிலும் குடும்ப அரசியல் என்று என்னை தூற்றுகின்றனர், ஆனால் ஜனாதிபதிக்கு குடும்ப அரசியல் இல்லாவிட்டாலும், தனியான ஒருவகை குடும்ப ஆட்சி உள்ளது.
எனவே மலையக மக்கள் ஏமாற்றமடைய வேண்டாம், மலையகத்திற்கு ஒரு இலட்சம் வீடுகளை வழங்குவதாக கூறினர் அதுவும் நடைபெறவில்லை.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதே எனது கொள்கை.
நாட்டை பிரிப்பதற்கு எதிராக பெல்லன்வில் விமல ரத்ன தேரர் உள்ளிட்டோர் போராடினர் ஆனால் துரதிஸ்டவசமாக அவர் 03.02.2018 அன்று இயற்கை எய்தியுள்ளார். அது முழு நாட்டுக்கும் ஒரு இழப்பாகும்.
இந்த லெப்டோப் டான்ஸை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆடுகின்றார்கள். அதை சந்திரிக்கா அம்மையார் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு ஆடுகின்றார்.
எனவே நாடு என்னால் அபிவிருத்தி கண்டுள்ளது. ஆகையினால் எம்மோடு கைகோர்த்து வெற்றிவாகை சூடுவோம். நாட்டின் அபிவிருத்தியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வோம் என்றார்.
(க.கிஷாந்தன்)