2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர் சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக உயிரிழந்தார்.
நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் கருக்கலைப்பு நடவடிக்கை வரலாறு காணாதவகையில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் ஆகாதவர்கள் எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கையடக்கத்தொலைபேசி பாவனை மற்றும் சமூக ஊடகங்கள் ஊடான நட்புறவுக்கறே கருத்தரிப்புக்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பில் 2020 ஆம் ஆண்டு 34 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டு 48 முறைப்பாடுகளும், 2022 ஆம் ஆண்டில் 65 முறைப்பாடுகளை பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட சட்டவிரோத கருக்கலைப்புகள் மாத்திரமே இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக பதிவு செய்யப்படாது சட்டவிரோத கருக்கலைப்புகளும் நாட்டில் இடம்பெறாமல் இல்லை.
நாட்டில் கடந்த காலங்களில் சட்டவிரோதமான கருக்கலைப்பு நடவடிக்கைகளினால் உயிர்கள் பறிபோன சம்பவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர் சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பதிவுசெய்யப்பட்டது.
அத்துடன், வைத்தியர்களின் பரிந்துரை மற்றும் ஆலோசனை இன்றி கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த நிலைமையானது உயிராபத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது.
இதனிடையே, 2018 ஆம் ஆண்டு தரவுகளுக்கமைய இலங்கையில் வருடமொன்றுக்கு 35,500 குழந்தைகள் பிறக்கின்ற நிலையில், 36,500 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக வைத்தியர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் 40 ஆயிரம் சட்டவிரோத கருக்கலைப்பு வைத்தியர்கள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் கருக்கலைப்பு குற்றமாகவே கருதப்படும் நிலையில், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் கருவை கலைப்பதற்கு வைத்தியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் துஷ்பிரயோகம், 16 வயதுக்கு கீழ் கர்ப்பம் தரித்தல் (பாலியல் வன்முறை), 12 ஆம் வாரம் கருவில் தீவிர குறைப்பாடு போன்ற சந்தர்ப்பங்களின் பொது கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டது.
இதன்படி, 2017 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் கொண்டுவரப்பட்ட உத்தேச கருக்கலைப்பு சட்டமூலம் மதத்தலைவர்களின் எதிர்ப்பினால் கிடப்பில் போடப்பட்டது.