இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில், இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.
காலி மைதானத்தில் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பெத்தும் நிஸங்க 73 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பெர்மால் 5 விக்கெட்டுகளையும் வோரிக்கான் 4 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் சேஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிரைஜ் பிரத்வெயிட் 72 ஓட்டங்களையும் பிளக்வுட் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரமேஸ் மெண்டிஸ் 6 விக்கெட்டுகளையும் எம்புல் தெனிய மற்றும் ஜெய விக்கிரம ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 49 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 345 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, இலங்கை அணி 297 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பெர்மால் 3 விக்கெட்டுகளையும் ரொஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும் ஹோல்டர் மற்றும் பிரத்வெயிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து ஒருநாள் மீதமிருக்க 297 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 132 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிரைஜ் பிரத்வெயிட் 72 ஓட்டங்களையும் பிளக்வுட் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய மற்றும் ரமேஸ் மெண்டிஸ் ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக தனஞ்சய டி சில்வாவும் தொடரின் நாயகனாக பெத்தும் நிஸங்கவும் தெரிவுசெய்யப்பட்டனர்.