“இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது. அண்டை நாடுகளாகவும், ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவை எவராலும் பிரிக்க முடியாது” என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக இலங்கை – இந்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியும், இரவு விருந்தும் நேற்றுமுன்தினம் (15) திங்கட்கிழமை இரவு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் தனுஜா ஜா ஆகியோரின் அழைப்பின் பேரில் அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நமது நெருங்கிய அண்டை நாடான இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இலங்கை – இந்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்திய அரசுக்கும், மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இந்த நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதந்திர தினம் என்பது சுதந்திரத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தின் மதிப்புகளை பாதுகாக்க அயராது உழைத்த மக்களின் ஒற்றுமையை நினைவூட்டுகின்றோம்.
இலங்கையர்களாகிய நாம் இந்தியாவின் சாதனைகள் குறித்து மகிழ்ச்சியடைகின்றோம்.
இந்திய – இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது. இலங்கையும், இந்தியாவும் அண்டை நாடுகளாகவும், ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன.
கலாச்சார நிகழ்ச்சிகள், கல்வி நடவடிக்கைகள் உட்பட பல துறைகள் மூலம் இந்த நட்பை பாதுகாப்பதில் இலங்கை – இந்திய சமூகம் மதிப்புமிக்க பங்கைக் கொண்டுள்ளது.
நாட்டில் சவாலான காலங்களில், மனிதாபிமான உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு ஆதரவை வழங்கியுள்ளது.
நவீன யுகத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் பரவியுள்ளது. இலங்கையின் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்கள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் மற்றொரு எடுத்துக்காட்டு சுகாதாரப் பராமரிப்பு. கொழும்பில் அப்பலோ வைத்தியசாலைகளை நிறுவுதல் மற்றும் நாட்டில் நன்கொடையாக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் சேவையைத் தொடங்குதல் உள்ளிட்ட நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன.
கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் அரசியல் மற்றும் மூலோபாய உறவுகள், மேலும் உதவித்தொகைகள், பயிற்சித் திட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள், கலை ஒத்துழைப்புகள், அத்துடன் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் இலங்கையின் பிராந்திய ஈடுபாடு போன்ற விடயங்கள் மூலம், இலங்கையும், இந்தியாவும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் தோளோடு தோள் நிற்கின்றன.
பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை உறுதி செய்யும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியா தனது 79 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், இலங்கை கடந்த காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டுகளில், வர்த்தகம், கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பரிமாற்றம் ஆகிய துறைகளில் நாம் தொடர்ந்து உறவுகளை உருவாக்க வேண்டும்., முக்கியமாக, பல நூற்றாண்டுகளாக நம்மை வழிநடத்தி வரும் நம்பிக்கை, மரியாதை மற்றும் நட்பின் மதிப்புகளை நாம் தொடர்ந்து வளர்க்க வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பம் இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடுவது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், 79 ஆவது சுதந்திர தினத்தன்று, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிரிக்க முடியாத பரஸ்பர உறவு மற்றும் ஒத்துழைப்புப் பயணத்தில் இந்தியக் குடியரசுக்கு இலங்கை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
இலங்கை – இந்திய சங்கம் 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வளர்ப்பதிலும், மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி பங்காளியாக உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான இன மற்றும் கலாச்சார உறவுகள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கும் மேலானவை” என்றார்.
இலங்கை – இந்திய சங்கத் தலைவர் யமுனா கணேசலிங்கம், செயலாளர் சரவணன் நீலகண்டன், துணைத் தலைவர் ரெங்கநாதன் மற்றும் இலங்கை – இந்திய சங்க உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.