மலையக பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மிகுந்த கரிசனையோடு செயல்பட்டு வரும் நிலையில் சிலர் பிழையான தகவல்களை வெளியிட்டு காங்கிரசுக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி சிலர் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
கல்வி அதிகாரிகளின் பிழையான நடவடிக்கைகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருபோதும் துணை நிற்காது. அத்துடன் தனிப்பட்ட காரணங்களுக்காக பாடசாலைகளின் வளர்ச்சியை தடுப்பதற்கு எவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெயரை பயன்படுத்திக் கொள்ளவும் முடியாது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கல்வி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
எமது பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானை அமைச்சர் என்ற ரீதியில் எந்த ஒரு அதிகாரியும் சந்திக்க முடியும். அத்தோடு அவர்களின் கருத்துக்களையும் தெரிவிக்கவும் முடியும். அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக முன் வைக்கப்படுகின்ற திட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்த எப்பொழுதும் தயாராக இருக்கின்றார்.
அதே வேளையில் தனிப்பட்ட எவருடைய நிகழ்ச்சி நிரலுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசையோ அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் பெயர்களை பயன்படுத்திக் கொள்ள எவருக்கும் இடமில்லை என்பதை கல்வி சமூகத்துக்கு தெளிவாக தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.