இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவு!

0
22

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (05) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்தத் தெரிவு இடம்பெற்றது. இதன்போது பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரேஹாணதீர உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் நீண்டகால தொடர்புகளை சுட்டிக்காட்டியதுடன், வர்த்தகம், கல்வி, பாதுகாப்பு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை எடுத்துரைத்தார். அத்துடன், இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர், பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பது இந்த நட்புறவை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும் எனவும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் நட்புறவுச்சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் பாகிஸ்தானின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பது  குறிப்பிடத்தக்கது என அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், குறிப்பாக மத மற்றும் கலாசார பாரம்பரியம் தொடர்பான சுற்றுலாத் துறையை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களை பாகிஸ்தானுக்கு வருகை தருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக்க தனது உரையில், தன்னைத் தேர்ந்தெடுத்தமை தொடர்பில் நன்றி தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையில் உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கு நட்புறவுச் சங்கம் ஒரு அர்த்தமுள்ள தளமாக இருக்கும் என்றும் கூறினார். சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் அதன் செயல்பாடுகளுக்குப் பங்களிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதன்போது நன்றியுரை ஆற்றிய புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக், சபாநாயகர், உயர் ஸ்தானிகர் மற்றும் வருகை தந்த  அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இலங்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிப்பது தொடர்பில் அவர் பாராட்டியதுடன், இச்சங்கத்தின் நோக்கங்களை அடைய சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

இந்தக் கூட்டத்துக்கு முன்னர், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இரு தரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது தொடர்பில் சபாநாயகரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், முதலீடு, வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை  வலுப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here