இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் அரசியலமைப்பிற்கு முரணாக உள்ளன!

0
3

 அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம்” தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கௌரவ சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி இன்று (30) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, உயர் நீதிமன்றத்தினால் சட்டமூலம் அரசியலமைப்புடன் இணங்கும் தன்மையை பின்வருமாறு சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

  • சட்டமூலத்தின் 8(2) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்களை 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறச் செய்யும் வகையில் திருத்தப்பட வேண்டும்.
  • சட்டமூலத்தின் 13(1)(இ) பிரிவு அரசியலமைப்பின் 3 ஆவது உறுப்புரைக்கு முரண்படுவதால், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையொன்றின் மூலம்அங்கீகரிக்கப்பட்டு பொதுமக்கள் வாக்கெடுப்பில் பொதுமக்கள் அதனை அங்கீகரிக்க வேண்டும். எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளதற்கு அமைவாக அப்பிரிவு திருத்தப்படுமானால் அந்த முரண்பாடு இல்லாமல் போகும்.
  • சட்டமூலத்தின் 13(1)(ஆ) பிரிவின் இரண்டாம் கட்ட பல்வகைப்படுத்தலில் ஊழியர்களின் இடமாற்றம் மற்றும் ஊழியர்களாக அவர்களின் உரிமைகள் தொடர்பான எந்த விதிகளும் இல்லாததால் இந்தப் பிரிவு தெளிவற்றதாகவும் தன்னிச்சையாகவும் உள்ளது. எனவே, இந்தப் பிரிவு அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையுடன் வாசிக்கப்படவேண்டிய பிரிவு 14(1)(எ) உறுப்புரைக்கு முரண்படுவதால் அரசியலமைப்பின் பிரிவு 84(2) உறுப்புரைக்கு அமைய விசேட பெரும்பான்மையால் மாத்திரம் அங்கீகரிக்கப்படவேண்டு. எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளதற்கு அமைவாக அப்பிரிவு திருத்தப்படுமானால் அந்த முரண்பாடு இல்லாமல் போகும்.
  • சட்டமூலத்தின் 13(1)(இ) பிரிவு அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(எ) உறுப்புரைகளுடன் முரண்படுகிறது. எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளதற்கு அமைவாக அப்பிரிவு திருத்தப்படுமானால் அந்த முரண்பாடு இல்லாமல் போகும்.

அத்துடன், அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்)” (ச.வ.-ஓ 19/2025) மற்றும் “வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்)” (ச.வ.-ஓ 20/2025) எனும் சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களும் கௌரவ சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக் பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவித்தார்.

இச்சட்டமூலங்களின் ஏற்பாடுகள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்திக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் எனவும், ஆனால் “வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் முதலில் சாதாரண பெரும்பான்மையால் சட்டமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இந்த சட்டமூலங்கள் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால் இந்த முரண்பாடு நீக்கப்படும் என உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

அத்துடன், அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “கம்பெனிகள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானமும் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

அதற்கமைய, S.C. (SD) 19/2025 மற்றும் S.C. (SD) 20/2025 ஆகிய மனுதாரர்கள் குழுநிலை திருத்தங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களில் திருப்தி அடைந்ததால், இரு மனுக்களையும் மீளப்பெறல் என முடிவு செய்துள்ளதால் குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புடன் இணங்கும் தன்மை தொடர்பாக நீதிமன்றம் தீர்மானமொன்றை வழங்கவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here