உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் திங்கட்கிழமை (03) இலங்கை வருவிருக்கின்றார்.
வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பினை ஏற்று இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து பல முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோருடன் முக்கிய உயர்மட்ட சந்திப்புகளில் வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் மோதலுக்கு பின்னரான நல்லிணக்கத்துக்கு ஆதரவளிப்பதில் திருச்சபையின் தொடர்ச்சியான ஈடுபாட்டை இந்த விஜயம் அடிக்கோடிட்டு காண்பிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 20ஆவது ஆண்டு நிறைவுடன் இந்த விஜயம் அமைந்துள்ளது. வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் தனது உயர்மட்ட சந்திப்புக்களின் போது இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கொழும்பிலுள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் இலங்கை – வத்திகானுக்கிடையிலான ஐந்து தசாப்தகால இராஜதந்திர பங்களிப்பை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் நினைவுப் பேருரையொன்றையும் அவர் நிகழ்த்தவுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




