இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.
வெளியாருக்கு வழங்கும் பெருந்தோட்ட காணியை மலையக இளைஞர்களின் சுய தொழிலுக்கு வழங்க வேண்டும்.
என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜீவன் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
நூற்றாண்டு காலமாக இலங்கை பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்தியாக இருப்பவர்கள் மலையக தோட்டத்தொழிலாளர்கள். இலங்கையின் பிரதான வருவாயை தீர்மானிக்கிற அந்த மக்களின் வாழ்வியல் காலம் காலமாக இலங்கை அரசியலில் எவ்வளவு புறக்கணிக்க முடியுமோ அவ்வளவு புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாகவே பெருந்தோட்ட தரிசு நிலங்களை வேலைவாய்ப்பற்ற தோட்ட இளைஞர்களுக்கு விவசாய தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்து வழங்குவதில் எழுகிற எதிர்ப்பரசியலை பார்க்க வேண்டியுள்ளது.
மலையக பெருந்தோட்ட தரிசு நிலங்களில் தோட்ட தொழிலாளரின் பிள்ளைகளுக்கு இல்லாத உரிமை இங்கு வேறு எவருக்கு இருந்துவிடும்?
எமது மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை போராடி வெல்வதில் இருந்த அசமந்த போக்கே எங்களை எங்கள் உரிமைகளுக்கே கையேந்தி கேட்கும் நிலைக்கு இட்டு சென்றிருக்கிறது.
பெருந்தோட்ட நிலங்களில் காணப்படுகிற சுமார் 38 ஆயிரம் ஹெக்டேயர் தரிசு நிலம் மலையகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் அது பொருளாதார ரீதியில் அவர்களை ஸ்திரப்படுத்தும். தேயிலை விலைநிலங்கள் பயன்படுத்தாது தரிசாய், தனிப்பட்ட சுயலாபத்துக்காக பயன்படுத்துவதைவிட வேலைவாய்ப்பற்ற மலையக இளைஞர், யுவதிகளுக்கு கிடைப்பதே நியாமான நடவடிக்கையாகும்.