இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து தீவிர ஷாஸ் கட்சி நேற்று (16) விலகுவதாக அறிவித்துள்ளது.
மதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச் சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை இயற்றத் தவறியதே இதற்கு முக்கிய காரணம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காஸா உடனான போர் 21 மாதங்களாக நடந்து வரும் சூழலில் இராணுவ சேவை விலக்கு தொடர்பான விடயம் இஸ்ரேலில் விவாதமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு இஸ்ரேல் உயர் நீதிமன்றம், மதக்கல்வி பயிலும் மாணவர்களுக்கான இராணுவ விலக்கை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டது. இதேவேளை புதிய இராணுவ சேவை மசோதாவை உருவாக்க பாராளுமன்றம் முயற்சி செய்து வருகிறது
மத குருக்கள், புனித நூல்களை முழுநேரம் கற்பது புனிதமானது என்றும், தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் குறித்த கட்சியினர் அஞ்சுகின்றனர்.
ஷாஸ் கட்சி விலகுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு தீவிரக் கட்சியான யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) கட்சியும் இதே காரணத்திற்காக அரசாங்கத்திலிருந்து விலகியது.
இந்த இரண்டு முக்கிய கட்சிகளின் விலகல், நெதன்யாகு அரசாங்கத்தை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த இரு கட்சிகளின் விலகலுக்குப் பிறகு, நெதன்யாகுவின் கூட்டணிக்கு தற்போது 50 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை. எனவே நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்து சிறுபான்மை அரசாங்கமாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.