இஸ்ரேலிய அரசாங்கம் மோதலை விரிவுபடுத்தி காசா நகரத்தைக் கைப்பற்றுவதாக தீர்மானம் செய்த நிலையியல் நேற்று, சனிக்கிழமை டெல் அவிவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்தனர்.
பாலஸ்தீனப் பிரதேசத்தில் இன்னும் பிணைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள படங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி, அவர்களை விடுவிக்க கோரி அழைப்பு விடுத்தனர்.
பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கானதாக இருக்கும் என்று AFP தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் பிணைக் கைதிகளின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு 100,000 பேர் வரை பங்கேற்றதாகக் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் இந்த கூட்டம், சமீபத்திய போர் எதிர்ப்பு பேரணிகளில் இருந்தவர்களை விட குறைவாக இருந்தது என கணிக்கப்பட்டுள்ளது.
“பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஒரு நேரடி செய்தியுடன் நாங்கள் முடிப்போம்: காசாவின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு பணயக்கைதிகள் கொல்லப்பட்டால், நகர சதுக்கங்களிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும், ஒவ்வொரு நேரத்திலும், இடத்திலும் உங்களைத் துரத்துவோம்,” என்று கொல்லப்பட்ட பணயக்கைதியின் உறவினர் ஷஹர் மோர் ஜாஹிரோ AFP ஊடகத்திடம் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை காசா நகரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு பாரிய நடவடிக்கைக்கான திட்டங்களை பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
இஸ்ரேலின் சில நட்பு நாடுகள் உட்பட வெளிநாட்டு சக்திகள், பணயக்கைதிகள் திரும்புவதை உறுதி செய்வதற்கும், பகுதியில் மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கும் பேச்சுவார்த்தை மூலம் போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி வருகின்றன.
இஸ்ரேலிய இராணுவ உயர் அதிகாரிகளிடமிருந்து எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் இருந்தபோதிலும், நெதன்யாகு அவர்களின் முடிவை எதிர்த்து நிற்கிறார்.
இதேநேரம் பதிவொன்றின் மூலம்,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “நாங்கள் காசாவை ஆக்கிரமிக்கப் போவதில்லை – நாங்கள் காசாவை ஹமாஸிடமிருந்து விடுவிக்கப் போகிறோம்” என்று கூறினார்.