ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு தோட்டப்புற மாணவர்கள் உள்வாங்கப்படும் சதவீதத்தை அதிகரிக்கும் பணிகளை முன்னெடுக்க கல்வியற் கல்லூரியின் ஆணையாளருக்கு உத்தரவு
பெருந்தோட்ட உயர்கல்விதரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு தோட்டப்புற மாணவர்கள் உள்வாங்கப்படும் சதவீதத்தை அதிகரிக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் முன்வைத்த கோரிக்கை;கு சாதகமான நடவடிக்கைகளை எடுத்தற்கான உத்தரவை கல்வி அமைச்சர் பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் 16ஆம் திகதி கல்வி அமைச்சரை நேரில் சந்தித்த செந்தில் தொண்டமான், ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு தோட்டப்புற மாணவர்களை அதிகமாக உள்வாங்கப்படுவதற்கான விசேட பொறிமுறையொன்றின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் முயற்சியால் 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் தோட்டத் தொழிலாளர்களது பிள்ளைகளை மாத்திரமே சேர்க்க முடியுமென்ற நிலைமை காணப்பட்டது. என்றாலும், காலப்போக்கில் இந்நிலமை மாறி பெருந்தோட்ட மாணவர்கள் உள்வாங்கப்படும் சதவீதம் மிகவும் குறைந்தது.
இதன் பாரதூரத்தையும் பெருந்தோட்ட கல்வித்துறையின் வளர்ச்சிக்காக ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ஏற்படுத்தப்பட வேண்டிய அணுகுமுறை மாற்றம் குறித்தும் கல்வி அமைச்சரின் கவத்துக்கு செந்தில் தொண்டமான் கொண்டுசென்றன் விளைவான அதற்கான விரைவாக நடவடிக்கைகளை எடுப்பதற்கான உத்தரவுகளை கல்வி அமைச்சர் கல்வியற் கல்லூரியின் ஆணையாளருக்கு பிறப்பித்துள்ளார்.
ஆரம்பத்தில் தாய் தந்தையரின் ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியின் இலக்கங்களின் பிரகாரம் மாணவர்களை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு உள்வாங்கும் நடைமுறை பின்பற்றப்பற்றப்பட்டது. என்றாலும், தோட்டங்களில் அவுட்குரோவர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகள் அறவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் தோட்டப்புற மாணவர்கள் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் எண்ணிக்கை குறைவடைந்தது.
இந்தப் பொறிமுறையை மாற்றியமைக்கும் நோக்கில் தற்போதைய சூழ்நிலையில் இக்கல்லூரிக்கான அனுமதியை பெற தாய் அல்லது தந்தையின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகள் மாத்திரம் உள்வாங்கப்படும் நடைமுறையுடன் தமது மூதாதையினர் தோட்டங்களில் பணிபுரிந்திருந்தால் அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கட்டாயம் அனுமதியை வழங்க வேண்டும் என்று செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் விரைவாக இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு கல்வியற் கல்லூரியின் ஆணையாளர் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு கடிதம் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.