அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சுமார் ஒரு வருட காலமாகின்றது மலையகத்தில் எந்த வேலைத்திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
பல காபட் பாதைகள் பூர்த்தி செய்யப்பட்டு இன்றும் கூட மக்கள் பாவனைக்காக கௌரவ ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் கையளிக்கப்பட்டுள்ளன. இன்றும் கூட பல காபட் பாதைகள் கையளிக்கப்படவுள்ளன. கடந்த வாரம் கூட நாங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மக்களுக்கு கையளித்துள்ளோம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் காலப்பகுதியில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்காக செய்யும் வேலைகளை ஒருபோதும் பட்டியல் இடுவதில்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச்செயலாளருமான எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருவுக்கமைய ஒரு லட்சம் கிலோமீற்றர் காபட் பாதைகள் மக்களுக்கு கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கமைய நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் ஹட்டன் கொட்டகலை பிரதான பாதையினை இணைக்கும் கிரிலஸ்பாம் கே.ஓ.டிவிசன் பிரதான பாதை 4.45 கிலோ மீற்றர் பாதை சுமார் 80 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன குறித்த பாதையினை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் நேற்று (07) நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..
தேர்தல் காலங்களில் எமது தலைவர் இப்பகுதிக்கு வரும் போது இந்த பாதையினை அபிவிருத்தி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார்கள் அந்த வேண்டுகோளுக்கமைய ஒரு வருட காலத்தில் இந்த பாதை அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா காலத்திலும் சரி ஜீவன் தொண்டமான் காலத்திலும் சரி நாங்கள் செய்யும் சேவைகளை மக்களை சென்றடைய வேண்டும் என்பது தான் எமது ஒரே நோக்கம். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நேற்று 1 லட்சம் கிலோ மீற்றர் நீளமான 1500 பாதைகள் திறந்து வைக்கப்பட்டன.
இன்று மலையகத்தில் பல பாதைகள் திறந்து வைக்கப்படுகின்றன. இன்று நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமன்று பல பகுதிகளில் காபட் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ்ஸினை பொருத்தவரையில் மக்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தி வேலைகளை செய்து வந்திருக்கிறது எதிர்காலத்திலும் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்படும் என இவர் இதன் போது தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், பிலிப்குமார், உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், பிலிப்குமார் உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்தனர்.
கே.சுந்தரலிங்கம்