ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா பரிசீலனை

0
34

ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு பரீசிலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தலாம் எனவும், ஆனால் இராஜதந்திர தீர்வையே விரும்புவதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஈரானில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்,  இராஜதந்திர தீர்வையே விரும்புவதாகவும், ஆனால் இராணுவத் தாக்குதல் திட்டங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரிய அளவிலான போராட்டங்களும் கலவரங்களும் ஈரானை நிலைகுழையச் செய்துள்ளன. கடந்த பல நாட்களாக பாதுகாப்புப் படையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கலவரத்தில் டஜன் கணக்கான பாதுகாப்புப் பணியாளர்களும் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

புதிய வரிகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானில் போராட்டகாரர்களை கட்டுப்படுத்தினால் இராணுவ ரீதியாக தலையிடுவதாக டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில் புதிய வரி விதிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் விடுத்துள்ள பதிவு ஒன்றில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here