உத்தரப் பிரதேசத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் உள்ளிட்ட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் காரில் சென்றபோது விவசாயிகள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்துள்ளனர்.
அப்போது விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோச்சார் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை சேதப்படுத்தியதாகவும், காரை தீயிட்டும் கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் லக்கிம்பூரில் வன்முறை வெடித்தது. போலீஸார் கூட்டத்தை தடியடி நடத்திக் கலைத்தனர். வன்முறை களமாக மாறிய லக்கிம்பூரில் கார் மோதி 4 விவசாயிகளும், தொடர்ந்து நடைபெற வன்முறை மோதலில் 4 பேரும் என மொத்தம் 8 பேர் பலியாகினர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நடந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “சம்பவ இடத்தில் எனது மகன் இல்லவே இல்லை. அங்கிருந்த சில சமூக விரோதிகளே போராட்டக்காரர்களே கத்தி, கம்பு கொண்டு தாக்கியுள்ளனர். என் மகன் மட்டும் அங்கிருந்திருந்தால் நிச்சயமாக உயிருடன் திரும்பியிருக்க மாட்டார். எனது மகன் துணை முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் தான் இருந்தேன்” என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் கண்டனம்:
லக்கிம்பூர் வன்முறை குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “இது போன்ற சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை. இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக விரோதிகளின் ஈடுபாடு கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூருக்குச் செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
லக்கிம்பூர் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப் பட வேண்டும் என்று உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.