தற்சமயம் நடைமுறையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களின் எல்லைகளைத் தொடர்ந்தும் பேணுவதா என்பது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்து தேவைக்கு ஏற்ற வகையில் அவற்றின் எல்லைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். ஜனாதிபதி அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, உயர் பாதுகாப்பு வலயங்கள் இயற்கையாக உருவாக்கப்பட்ட எல்லைகள் இல்லையென்றும், எனவே தற்பொழுது காணப்படும் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அவ்வாறான உயர் பாதுகாப்பு வலயங்களின் எல்லைகளில் மாற்றங்களைச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள பொது மக்களின் தனிப்பட்ட காணிகளை மீண்டும் அவர்களுக்கே பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பாதுகாப்பு முகாம்கள் அல்லது வெவ்வேறு தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் தனியார் காணிகள் மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மீண்டும் கையளிக்கக் கூடிய தனியார் காணிகளை வழங்குவதற்கும், அவ்வாறு வழங்குவதற்கு முடியாதுள்ள காணிகளுக்காக நியாயமான நஷ்ட ஈட்டை வழங்கி அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
அதேநேரம், அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு முகாம்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் எந்தளவு காணிகளைப் ஒதுக்க முடியும் என்பது தொடர்பிலும் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், 2026.04.09ஆம் திகதி பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட (357 ஆம் அத்தியாயமான) தரைப்படைச் சட்டத்தின் கீழ் 29ஆம் மற்றும் 155ஆம் பிரிவுகளின் கீழான ஒழுங்குவிதி, (358 ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதி மற்றும் (359 ஆம் அத்தியாயமான) வான்படைச் சட்டத்தின் 29 ஆம் மற்றும் 155 ஆம் பிரிவுகளின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன ஆராயப்பட்டு குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.




