உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களுடன் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இன்று விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்.
இந்த கலந்துரையாடலில், இ.தொ.காவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான டி.வி.சென்னன், உபத் தலைவர் அசோக்குமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் இ.தொ.காவின் உள்ளூராட்சி சபை வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய இ.தொ.காவின் தலைவர்,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறுகிறதோ இல்லையோ அனைவரும் தொடர்ந்து மக்கள் பணியை மேற்கொள்வதை நிறுத்திவிடக்கூடாது தேர்தலில் வெற்றிபெற்றால் தான் மக்கள் பணியை செய்ய வேண்டும்மென்று இல்லை. சமூகப்பணிக்கு வந்துவிட்டால் எந்தவொரு சூழலிலும் மக்கள் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றால் தான் பணியாற்றுவேன் என்பது ஒரு சுயநல அரசியலாகும். மக்கள் சேவைதான் எமது மூலாதாரம்.
தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற குழப்பநிலை நீடிப்பதால் மக்கள் பணியை விட்டுவிட்டு ஓய்வெடுத்துவிட்டு தேர்தல் நடைபெறும் சந்தர்ப்பதில் மீண்டும் மக்களை சந்திக்க செல்லலாம் என்ற நிலைப்பாட்டில் இ.தொ.கா வேட்பாளர் எவரேனும் இருந்தால் மீண்டும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நிலைமை ஏற்படும் போது அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படாது.
இன்றைய பொருளாதார நெருக்கடியான சூழலில் மக்களுடன் முன்னின்று அர்ப்பணிப்புடன் செயல்படுவதே இ.தொ.காவின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.