தெலுங்குத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, 30 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் ஆக.4-ம் தேதி முதல் திரைப்பட, சின்னத்திரை, வெப் தொடர் படப்பிடிப்புகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், உயர்த்தப் பட்ட ஊதியத்தை வழங்குவதாகத் தயாரிப்பாளர்கள் உறுதியளித்து கூட்டமைப்புக்குக் கடிதம் கொடுத்தால் மட்டுமே, தொழிலாளர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவாதக் கடிதம் வழங்காத தயாரிப்பாளர்களின் படங்களில் பணிபுரியக் கூடாது என்றும் அறிவித்தது. இது தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி அங்கு நடக்கும் மற்ற மொழி திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் பொருந்தும் எனவும் கூறியிருந்தனர்.
இந்த கோரிக்கையை தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை நிராகரித்து விட்டது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிற்சங்கங்கள் கோரும் ஊதிய உயர்வு, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் செயல்படும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற உயர்வை அவர்
களால் தாங்க முடியாது. இதனால் இந்த உயர்வை அனைத்து தயாரிப்பாளர்களும் எதிர்க்கின்றனர்.
தெலுங்கு திரைத்துறை மற்ற மாநிலங்களை விட தொழிலாளர்களுக்கு அதிக ஊதியத்தை ஏற்கெனவே வழங்கி வருகிறது. இதனால் நாங்கள் ஒரு மனதாகத் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளோம். அதன்படி, சங்கங்களில் இல்லாத, திரைப்படத் துறையில் ஆர்வமுள்ள தொழில் வல்லுநர்கள்/தொழிலாளர்களுடன் பணிபுரிய தயாரிப்பாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
தொழிற்சங்கத்தைப் பொருட்படுத்தாமல், நியாயமான சம்பளத்தை ஏற்றுக்கொண்டு பணியாற்றும் தொழிலாளர்களைத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சினிமாவில் பங்களிக்கப் பல திறமையானவர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
தயாரிப்பாளர்கள் இல்லாமல் திரைப்படத் துறை செயல்பட முடியாது. தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னேற்றத்துக்குத் தயாரிப்பாளர்களின் நலனும் முக்கியம் என்பதைத் தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது