இந்தியாவுடன் அரசாங்கம் எட்கா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால் நாடே ஸ்தம்பிதம் அடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து முழு நாட்டையும் ஸ்தம்பிதமடையச் செய்ய நேரிடும் என சங்கம் தெரிவித்துள்ளது.
எட்கா உடன்படிக்கைக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டம் நாடு தழுவிய வேலையில்லாப் போராட்டமாக மாற்றமடைந்தால் அதன் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
எட்கா உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீளவும் உடன்படிக்கையை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எட்கா உடன்படிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டு எமது சங்கம் ஏற்கனவே மகஜர் ஒன்றில் கையொப்பங்களை திரட்டி வருகின்றது.
கையொப்பங்கள் திரட்டப்பட்டதன் பின்னர் பாரிய பேரணியாக சென்று ஜனாதிபதியிடம் மகஜர் ஒப்படைக்கப்படவுள்ளது.
வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.