எந்த நபரின் காலையும் பிடிக்காமல் ஆசிரியர் நியமனம் பெற முடியும்! வேலுகுமார் எம்.பி

0
139

“தகைமையை பூர்த்திசெய்த மலையக ஆசிரிய உதவியாளர்களே ஆசிரிய சேவைக்கான நியமனத்தை கோருகின்றனர். அதற்க்கு யாருடைய காலடியிலும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை.” என கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தின் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்கு உள்வாங்குவது, கடந்த இரு வருடங்களுக்கு அதிகமான காலம் இழுபறி நிலையில் உள்ளது. அவர்களின் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சர் உட்பட அனைத்து அதிகார மட்டத்தில் உள்ளவர்களுக்கும் நாம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். பாராளுமன்றத்தில் பல தடவைகள் இப்பிரச்சினையை சுட்டிக்காட்டி இருக்கின்றோம். அதன் அடிப்படையில் கடந்த 15 ஆம் திகதி, 306 பேருக்கான நியமங்கள் வழங்குவதற்குரிய கடிதம் அனுப்பப்பட்டது. எனினும் அரச தரப்பில் உள்ள மலையக பிரதிநிதிகளின் தலையீட்டால் மீண்டும் இந்நியமனம் வழங்கல் பிற்போடப்பட்டிருக்கின்றது. தமது அரசியல் வங்குரோத்து நிலையை மூடி மறைப்பதற்கு இந்நியமனத்தையும் ஒரு கருவியாக பயன்படுத்தும் செயற்பாடே இதுவாகும். தகைமைகளை பூர்த்திசெய்த மலையக ஆசிரிய உதவியாளர்களே, ஆசிரிய சேவைக்கான நியமனத்தை கோருகின்றனர். அதற்க்கு யாருடைய காலடியிலும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை.

2015 ஆம் ஆண்டு, அமைச்சரவை தீர்மானத்தின் படி, மலையக தோட்ட பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது. அதன் போது, மாதமொன்றுக்கான கொடுப்பனவு ரூபா 6000 மட்டுமே வழங்கப்பட்டது. அதன் பின்னர் அத்தொகை ரூபா 10000 ஆக அதிகரிக்கப்பட்ட்டது. ஆசிரிய உதவியாளர்கள் தமது பயிற்சிகளை பூர்த்திசெய்து, தகைமைகளை முழுமைப்படுத்துகின்ற போது, உடன் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படல் வேண்டும். அதன் அடிப்படையில் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் சேவை நியமனம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு காலதாமதமான காலத்திற்குரிய நிலுவை கொடுப்பனவும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் ஒரு பகுதியினருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கான நிலுவை கொடுப்பனவு எதுவும் இதுவரையும் வழங்கப்படவில்லை. அது மட்டுமன்றி எஞ்சியுள்ள நியமனங்கள் இதுவரையும் வழங்கப்படவில்லை. இன்று ஆசிரிய உதவியாளர்கள் தமது நியமனத்தை பெறுவதற்கு வீதிகளில் இறங்க வேண்டிய நிலைமையை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.

மத்திய மாகாணத்தில் இன்னும் 380 ஆசிரிய உதவியாளர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவேண்டியுள்ளது. அதிலே 306 பேருடைய கோவைகள் முழுமைப்படுத்தப்பட்டு நியமனம் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 74 பேருடைய கோவைகள் இன்னும் முழுமைப்படுத்தப்படாது இருக்கின்றது. அதில் அசமந்த போக்கு காணப்பட்டு வருகின்றது. இச்சூழ்நிலையில் அரச பலத்தை கொண்டிருப்பவர்கள் இன்னும் பூர்த்திசெய்யப்படாத கோவைகளை முதுமைப்படுத்தி நியமங்களை வழங்க அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக, நியமங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதை தடுப்பது அல்ல.

மலையக மக்கள் எமக்கு வாக்களித்து அரசியல் பலத்தை பெற்றுத்தந்திருப்பது மலையக சமூகத்திற்கு சேவை செய்வதற்கு. அவ்வாறு அல்லாது அரசியல் பலத்தை பயன்படுத்தி சுயலாப செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அல்ல. இதை புரிந்துகொண்டு ஆசிரிய உதவியாளர் விடயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்து அசிங்கப்பட வேண்டாம் என கூறிக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here