உலகில் எந்த மூலையில் நாம் வாழ்ந்தாலும் “தமிழர்” என்பது எமது அடையாளம். ஆனால், சமூகவியலால், புவியியலால், ஈழ, மலையக தமிழர்கள் ஒரே தமிழர் என்ற அடையாளத்துக்குள் இலங்கையில் இன்று இல்லை.
மேலோட்டமாக கொழும்பில் நாம் அப்படி வாழ்ந்தாலும், ஊருக்குள்ளே யதார்த்தம் அப்படி இல்லை. எனவே “ஒரே தமிழர்” என்ற அடையாளத்துக்குள் இரு தரப்பினரையும் காத்திரமாக கொண்டு வர என்ன செய்வது என நாம் யோசிக்க வேண்டும்.
அதற்கு இரு தரப்பினர் மத்தியிலும் ஐக்கியத்தை பிரேரிப்போர், முதலில் இரு தரப்பு வரலாறுகளையும், தனித்துவங்களையும், பரஸ்பரமாக, சமத்துவமாக அங்கீகரிக்க வேண்டும். ஐக்கியப்பட வேண்டிய தரப்புகள் மத்தியில் ஐக்கியம் ஏற்பட இதுவே எங்கேயும் வழி. முதலில் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அங்கீகரிக்க வேண்டும்.
சிங்களவர், தமிழர் மத்தியில் தேசிய ஐக்கியம் வேண்டுமென்றாலும் கூட, இரு தரப்பையும் சமமாக அங்கீகரித்தால் மாத்திரமே அங்கே உண்மை ஐக்கியம் ஏற்படும். அதுபோல்தான் இதுவும்.
இவற்றை கவனத்தில் எடுக்காமல், பொத்தாம் போக்கில் “நாம் தமிழர்” என்று கோசம் எழுப்பினால், அது ஒரு தரப்பு தமிழர்கள், ஒட்டு மொத்த தமிழர்களையும், அவர்கள் இவர்களையும், இவர்கள் அவர்களையும், தத்தம் தேவைகளுக்காக பயன்படுத்தும் நிலைமையில் கொண்டு போய் விட்டு விடும்.
மலையகம், அலட்சியப்படுத்தப்படும்போது அதை ஞாபகப்படுத்துவதும், ஈழம், அலட்சியப்படுத்தப்படும்போது அதை ஞாபகப்படுத்துவதும் பரஸ்பர தேவைகள். அவற்றை செய்தாலே சமத்துவம் ஏற்படும். புரிந்துணர்வு ஏற்படும். அதுவே தமிழர் ஐக்கியத்துக்கு வழிகாட்டும்.
இந்த மலையகம், ஈழம் ஆகிய உள்ளக இன அடையாளங்களை வெறும் பிற்போக்கு ஜாதிய அடையாளங்கள் அல்ல. அவை வேறு. இவை வேறு.
இதைத்தான் “தமிழர் ஐக்கியத்தை பிரேரிப்போர், ஈழ, மலையக தமிழ் அடையாளங்களை, பரஸ்பர சமத்துவமாக அங்கீகரிக்கனும். அல்லாது, ‘தமிழ் இலங்கை’ அடையாளம் இல்லை” என்று என் டுவீடர் தளத்தில் கூறியுள்ளேன்.
என்னை பயன்படுத்தி சில எச்சிலைகளை பொறுக்கிக்கொண்ட சிலர், பிரதேசவாதிகளாக இருந்துள்ளார்கள். இப்போதும் அவர்கள் சமூக அரசியல் பரப்பில் அப்படித்தான் வலம் வருகிறார்கள். ஆனால், வரலாறு முழுக்க நான் பிரதேச வாதத்தை முற்றாக வெறுத்து ஒதுக்கி கடும் நெருக்கடி நேரத்திலும் என்னை நிரூபித்துள்ளவன்.
அதனால்தான், எந்த ஒரு அரசியல் சுனாமியாலும் என்னை அள்ளிக்கொண்டு போக முடியவில்லை.
உண்மையில், பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் எம்பீக்களை கொண்டு “தமிழ் பாராளுமன்ற ஒன்றியம்” அமைக்க வேண்டும் என்ற என் யோசனை இன்று தோல்வியில் முடிந்துள்ளது. இதுபற்றி ஒரு முன்னணி தமிழ் நாளேடு ஆசிரியர் தலையங்கம்கூட எழுதியிருந்தார். ஆனால், இதையும்கூட செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம்.
இந்நிலையில் நாம் தமிழர்கள், எங்கே ஒரே இன அடையாளத்துக்குள் வருவது…………..? இதுதான் நம் தமிழர் ஐக்கியத்தின் இன்றைய இலட்சணம்!