எரிபொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக தோட்டத் தொழில் துறையும் பாதிப்படையக் கூடிய நிலைமை ஏற்படலாம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
முறையற்ற அரச நிர்வாகத்தின் காரணமாக எரிபொருட்களின் விலைகள் திடீர் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளன.
எரி பொருட்களுக்கும் நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக டீசல் தட்டுப்பாடு காரணமாக பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், பெருந்தோட்டத்துறை உற்பத்திகளை ஏற்றிச் செல்லும் பார ஊர்திகள்,ஏனைய கனரக வாகனங்கள் தமது சேவையை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை உற்பத்திகளை தலைநகருக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டிற்கு அந்நியச் செலவாணியைப் பெற்றுத் தருகின்ற தோட்டத் தொழில்துறை பாதிக்கப்பட்டால் தோட்டத் தொழிலாளர்களும் இந்த நாட்டு மக்களுமே பாதிப்படைய உள்ளனர்.
எனவே அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக தோட்டத் தொழில் துறையும் தற்போது பாதிப்படையும் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.